ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றப் புது கட்டிடம் இப்போது தேவையில்லை.. டி.ஆர்.பாலு பேட்டி

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள், உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்(காங்.), சரத்பவார்(என்சிபி), டி.ஆர்.பாலு(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி நிலவுகிறது. தமிழகத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை ஒரு மாத ஊதியத்தைக் கொடுக்குமாறு தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கொரோனா தடுப்பு பணிக்கு அளித்தோம். அடுத்ததாக, எம்.பி.க்கள் அனைவரும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினோம்.

அது மட்டுமல்ல. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தை , டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்குவதற்கு அளிப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். அதே போல், மாவட்டங்களிலும் திமுக அலுவலகங்களை ஒப்படைப்பதாக கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளோம்.தற்போதைய சூழலில், அரசியல் மனமாச்சரியங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். இதைத்தான் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் தெரிவித்தேன். மேலும், ஈரானில் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருமாறு வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் பிரதமருக்கு ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் வரவில்லை. அது பற்றியும் பிரதமரிடம் பேசினேன்.

இந்த தருணத்தில், ரூ.20 ஆயிரம் கோடி செலவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டத் தேவையில்லை என்பதையும் கூறினேன். அதே போல், ஏழைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 உதவித் தொகை போதாது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரத்தை 2 தவணைகளில் தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியுள்ளேன்.தற்போது கொரோனா ஒழிப்புப் பணியில், டாக்டர்கள், நர்ஸ்கள், காவல்துறையினர், உள்ளாட்சிப் பணியாளர்கள் என்று பல்வேறு துறை ஊழியர்களும் மிக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தலைவர் ஸ்டாலின் பல முறை தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

More News >>