கொரோனா தடுப்பு பணி.. முதல்வர் நிவாரண நிதியில் ரூ.80 கோடி சேர்ந்தது..

தமிழக முதல்வர் நிவாரண நிதியில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.80 கோடி சேர்ந்துள்ளது.தமிழகத்தில் இது வரை 680 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் ஏழை, நடுத்தர தொழிலாளர் வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கும், கொரோனா தடுப்பு பணிகளுக்கும் செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் நிதியுதவி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஏற்று பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதிக்குத் தொகை அனுப்பி வருகின்றனர். இது வரை இந்நிதியில் ரூ.80 கோடி சேர்ந்திருக்கிறது. இது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>