கொரோனா பாதிப்பு.. ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க அரசு முடிவு?

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது தவிர்க்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனவே, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்(காங்.), சரத்பவார்(என்சிபி), டி.ஆர்.பாலு(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக), ராம் கோபால் யாதவ்(சமாஜ்வாடி), சுதீப்பந்தோபாத்யா(திரிணாமுல்), சஞ்சய் ரவுத்(சிவசேனா) உள்பட 18 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 5 எம்.பி.க்களுக்கு அதிகமாக உள்ள கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி பேசுகையில், நாடு முழுவதும் கொரோனா பரவியிருப்பதை, சோஷியல் எமர்ஜென்சியாக கருத வேண்டியுள்ளது. இந்த சூழலில், ஊரடங்கை ஒரே தருணத்தில் விலக்கிக் கொள்வது என்பது தற்போது இயலாத காரியம் என்று பலரும் தெரிவித்தனர். அதுவே பொதுவான கருத்தாக உள்ளது. இப்போது கொரோனா பரவாமல் தடுக்க, மக்கள் சமூக இடைவெளியை முழு அளவில் பின்பற்றச் செய்ய வேண்டும். இதற்காக நாம் சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 11, 12 தேதிகளில் முதல்வர்களிடம் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசித்து விட்டு, அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>