இந்தியா, அமெரிக்கா இணைந்து வெற்றி பெறுவோம்.. டிரம்ப்புக்கு மோடி ட்வீட்

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி காண்போம் என்று டிரம்ப்புக்கு மோடி பதிலளித்துள்ளார்.கொரோனா நோய்க்குத் தற்காப்பு மருந்தாகப் பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துக் கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது. அமெரிக்காவுக்கு அந்த மருந்து, மாத்திரைகளைத் தர வேண்டுமென்று ஏற்கனவே பிரதமர் மோடியிடம் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.

இதன்பின், இந்தியாவின் ஏற்றுமதி தடையைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்யாவிட்டால், அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.இதைத் தொடர்ந்து, இந்திய அரசு ஒரு முடிவெடுத்தது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசரத் தேவைகளுக்காக பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கும் என்று கூறப்பட்டது. இதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், பிரதமர் மோடியைப் பாராட்டி, டிரம்ப் ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில், இந்தியாவின் உதவியால் இருநாடுகளின் நட்பு பலமாகும் என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்து பிரதமர் மோடி போட்ட பதிவில், நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இது போன்ற தருணங்கள்தான், நட்பை மேலும் நெருக்கமாகச் செய்யும். கொரோனாவுக்கு எதிரான மனிதப் போரில் இந்தியாவால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வோம். நாம் இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

More News >>