இந்தியாவில் கொரோனா பலி 199 ஆக உயர்வு.. 6412 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு இது வரை 199 பேர் பலியாகியுள்ளனர். 6412 பேர் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவில் தோன்றி உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகில் 16 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இது வரை 199 பேர் பலியாகியுள்ளனர். நேற்று வரை 6412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் 30 பேர் இறந்துள்ளனர் என்றும், புதிதாக 547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 834 பேருக்குத் தொற்று உறுதியாகி, 8 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, 9 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் 345 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 2 பேர் இறந்திருக்கிறார்கள். குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் தற்போது 179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் 345 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், ராஜஸ்தானில் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

More News >>