25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது - திரிபுராவில் பாஜக வெற்றி

கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவுகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் எளிமைக்கு பெயர் பெற்றவர். 1993ல் அக்கட்சியின் தசரத் தேவ் வெற்றி பெற்று முதல்வரானார். 1998ல் மீண்டும் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணிக் சர்க்காரை முதல்வராக்கியது.

அதைத் தொடர்ந்து, 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் மார்க்சிஸ்டுகள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நான்கு முறையாக மாணிக் சர்க்கார் முதல்வராகப் பதவி வகித்தார்.

இந்நிலையில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், அங்கு வாக்குகள் எண்ணப்படவில்லை. இதில் 35 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 43 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 16 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வென்றது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>