ஊரடங்கை நீட்டிக்க முடிவு.. பிரதமர் நாளை அறிவிப்பார்..

கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 6,500 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த வாரம் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்தார். பின்னர், நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்(காங்.), சரத்பவார்(என்சிபி), டி.ஆர்.பாலு(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக), ராம் கோபால் யாதவ்(சமாஜ்வாடி), சுதீப்பந்தோபாத்யா(திரிணாமுல்), சஞ்சய் ரவுத்(சிவசேனா) உள்பட 18 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 5 எம்.பி.க்களுக்கு அதிகமாக உள்ள கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி பேசுகையில், நாடு முழுவதும் ஊரடங்கை ஒரே தருணத்தில் விலக்கிக் கொள்வது என்பது தற்போது இயலாத காரியம். கொரோனா பரவாமல் தடுக்க, மக்கள் சமூக இடைவெளியை முழு அளவில் பின்பற்றச் செய்ய வேண்டும். இதற்காக நாம் சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிப்பார். அதன்பிறகு, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது பற்றி அறிவிப்பார். ஊரடங்கால் நாடு முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் கடுமையாகப் பாதித்துள்ளனர். ஒவ்வொரு நாளை கழிப்பதும் ஏழை மக்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது. மேலும், தொழில் வர்த்தகத் துறை ஸ்தம்பித்துப் போயுள்ளது.

எனவே, ஊரடங்கில் சிலவற்றைத் தளர்த்துவதற்கு மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று பிரதமர் அறிவிக்க வாய்ப்புள்ளது. அதே போல், விமானங்கள், ரயில்களில் சமூக இடைவெளி விட்டுக் குறைந்த எண்ணிக்கையில் பயணிகளை அனுமதிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படலாம். கொரோனா தாக்கம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் பலவும் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

More News >>