தமிழகத்தில் ஊரடங்கை ஏப்.28 வரை நீட்டிக்கப் பரிந்துரை.. மருத்துவ நிபுணர்கள் தகவல்..

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள், அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.இந்தியாவில் இது வரை 6,500 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14ம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 17 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். இந்த குழுவினர் இன்று முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர், குழுவின் சார்பில் ஐ.சி.எம்.ஆர். மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதிபா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாங்கள் 17 மருத்துவ நிபுணர்கள் இன்று முதல்வரைச் சந்தித்து எங்கள் பரிந்துரைகளை அளித்தோம். இந்த குழுவில் உலக சுகாதார நிறுவன டாக்டர்கள் உள்பட முக்கியமான நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இதனால், களப்பணியில் மருத்துவப் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்குத் தேவையான படுக்கைகள், அரசு மருத்துவமனைகளில் தயாராக உள்ளன. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த சூழலில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இன்னும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். மேலும், அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நிலைமைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளோம்.

இவ்வாறு பிரதிபா கூறினார்.

More News >>