தமிழகத்தில் கொரோனா பலி 11 ஆக உயர்வு.. 969 பேருக்கு நோய்ப் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று வரை 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் விவாதித்தார். இதன்பிறகு, ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கை ஏப்.30 வரை நீட்டித்து அறிவித்தனர்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஏற்கனவே 911 பேருக்கு கொரோனா நோய் பாதித்திருந்தது. தற்போது மேலும் 58 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது நோய் பாதித்தவர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்நோய்க்கு 9 பேர் பலியாகியிருந்தனர். மேலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவரும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவரும் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி எடுக்கும் முடிவைத் தமிழக அரசு பின்பற்றும். ஒடிசா, மேற்குவங்கம் எடுத்த முடிவைப் போல் நாம் அவசரமாக அறிவிக்கத் தேவையில்லை. ஏப்.15ம் தேதி காலை 6 மணி வரை நமக்கு அவகாசம் உள்ளது. நாம் சீனாவிலிருந்து 4 லட்சம் துரித பரிசோதனைக் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்) இறக்குமதி செய்யக் கோரியிருந்தோம். ஆனால், சீனாவிலிருந்து முதல்கட்டமாக அமெரிக்காவுக்கு அந்த சரக்குகளை அனுப்பி விட்டனர். மேலும், மத்திய அரசு இந்த கருவிகளை நேரடியாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அளிக்க முடிவெடுத்திருக்கிறது. எனவே, தமிழகத்திற்கு 50 ஆயிரம் கருவிகளை முதலில் அனுப்புமாறு கோரியிருக்கிறோம்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்களுக்குக் கூடுதல் நிவாரண உதவி அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார். மேலும், ரேஷன் கடைகளில் ரூ.500க்கு அரிசி, மளிகைச் சாமான்கள் பை வழங்கி வருகிறோம். இதே போல் ரூ.100, ரூ.150 பைகளைத் தயார் செய்து வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்.

இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

More News >>