தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1075 ஆக உயர்வு..

தமிழகத்தில் இது வரை 1075 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நாளை(ஏப்.14) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் விவாதித்தார். இதன்பிறகு, ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கை ஏப்.30 வரை நீட்டித்து அறிவித்தனர். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி இன்னும் அறிவிப்பு வெளிவரவில்லை. இது பற்றி, பிரதமர் முடிவு எடுப்பார் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே 969 பேருக்கு கொரோனா நோய் பாதித்திருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது;தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இவர்களில் 16 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா சந்தேகம் காரணமாக வீடுகளில் 39,041 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்த 59,189 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இது வரை 11 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 14 அரசு லேப் மற்றும் 9 தனியார் லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது வரை 10,655 பேருக்குச் சோதனை செய்யப்பட்டதில், 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தினமும் 2000 பேருக்குச் சளி, ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. 20 லட்சத்து 47,289 வீடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் சோதனை செய்துள்ளனர். மொத்தம் 82 லட்சத்து 94625 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு டாக்டர்கள் 2 பேர், ரயில்வே மருத்துவமனை டாக்டர்கள் 2 பேர், 4 தனியார் மருத்துவமனை டாக்டர்கள் என்று 8 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. தற்போது ஆர்.டி - பிசிஆர் டெஸ்ட் முறையில்தான் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. துரிதப் பரிசோதனை செய்யும் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்) இன்னும் வந்து சேரவில்லை. இது வந்தால், 30 நிமிடத்தில் ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை அறிந்து விடலாம். இதன் மூலம், பல ஆயிரம் பேருக்கு விரைவில் சோதனை செய்து விடலாம். சீனாவிலிருந்து இன்னும் இந்த கருவிகள் வந்து சேரவில்லை.

இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.

More News >>