ஊரடங்கு உத்தரவை மீறிய 1.75 லட்சம் பேர் கைது..

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நாளையுடன்(ஏப்.14) முடிவடைகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து திருப்பி அனுப்புகின்றனர். தொடர்ந்து ஊர் சுற்றும் இளைஞர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.

இது குறித்து, தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்கள், கூட்டம் சேர்த்தவர்கள் என்று இது வரை ஒரு லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விதிகளை மீறியவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 63,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 68 லட்சத்து, 57,344 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டிஜிபி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

More News >>