கொரோனா தடுப்பு பணி.. திமுக சார்பில் ஏப்.15ல் அனைத்து கட்சி கூட்டம்

கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் வரும் 15ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிகளை மந்தமாக மேற்கொள்வதாகவும், முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்கள் கூறுவதாகவும், மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்தி நிதியுதவி பெறாமல் அடங்கிப் போவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஊரடங்கை நீட்டிப்பதற்கு மத்திய அரசின் முடிவுக்குக் காத்திருப்பதா? என்று கண்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதமும் எழுதினார். இதையடுத்து, ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகவும், டாக்டர்களை கொச்சைப்படுத்துவதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார்.இந்தநிலையில், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவற்றை வழங்கினர். ஆனால், தமிழக அரசு திடீரென இதற்குத் தடை விதித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேரடியாக உதவி செய்யக் கூடாது. நிவாரண பொருட்களை அரசிடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், நிவாரணப் பொருட்கள் வழங்குவதை அரசு தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு:கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசின் மெத்தன செயல்பாடுகளைக் கண்டித்தும், ஏழை மக்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>