கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பிரதமர் அறிவிப்பார்..

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இது வரை 9152 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனாவுக்கு 308 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்து, அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிகிறது.

இதற்கிடையே, பிரதமர் மோடி டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட அனைத்து முதல்வர்களும் பங்கேற்றனர்.

கெஜ்ரிவால், அமரீந்தர் சிங் உள்படப் பல மாநில முதல்வர்களும், கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். மேலும், தங்கள் மாநிலத்திற்குத் துரித சோதனை கருவிகளை விரைவில் வழங்க வேண்டுமென்றும், விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு அதிக அளவில் நிதியுதவி அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்து பிரதமர் மோடி பேசுகையில், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் வரை நீட்டிப்பது தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், சில மாநில அரசுகள், ஊரடங்கை நீட்டிப்பதாக சுயமாக அறிவித்து விட்டன. ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன பட்நாயக் கடந்த 9ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபில் மே 1-ம் தேதி வரையும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களில் ஏப்ரல்30-ம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து விட்டன.தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், பிரதமர் எடுக்கும் முடிவைத் தமிழக அரசு பின்பற்றும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஊரடங்கு நாளை(ஏப்.14) முடிவடைகிறது. எனவே, பிரதமர் மோடி, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>