நாடு முழுவதும் மே 3 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.. ஏப்.20ல் சில கட்டுப்பாடு நீக்கம்.. பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஏப்.20ம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த மாதம் 24ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பினருடனும் தனித்தனியே வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர் விவாதித்தார்.இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று(ஏப்.14) காலை 10 மணிக்குத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: நாம் 21 நாள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த தருணத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் நான் விவாதித்தேன். பெரும்பாலானவர்கள் இந்த ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்றுதான் கருத்து கூறியுள்ளார்கள். எனவே, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கின் போது அடுத்த ஒரு வாரம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசுகள் எந்த அளவுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பொறுத்து ஏப்.20ம் தேதிக்குப் பிறகு, கொரோனா அதிகம் பரவாத பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம். ஊரடங்கால் மக்கள் பட்ட துயரங்களை நான் அறிவேன். மக்களின் தியாகங்களுக்கு நான் தலைவணங்குகிறேன், மக்கள் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேசத்தைக் காக்க வேண்டும். ஊரடங்கு வழிகாட்டுதல்கள் குறித்து நாளை விரிவாகத் தெரிவிக்கப்படும்.

தற்போது, ஏழைகளைக் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி மிகப் பெரும் சவாலாக உள்ளது. விவசாயிகளின் நலனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொருட்கள் சப்ளை பாதிக்கப்படாமல் கவனித்துக் கொள்ளப்படும்.நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க 210 சோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

மக்கள் சமூக இடைவெளியைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆரோக்கிய சேது ஆப்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். எந்த தொழிலிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கக் கூடாது. இந்த கடினமான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட முக்கியமான பணிகளை ஆற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

More News >>