கொரோனாவால் மக்கள் தவித்திருக்க நீச்சல் குளத்தில் மந்திரி..

கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் தவித்துக் கொண்டிருக்கக் கர்நாடகாவில் ஒரு மந்திரி தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாகக் குளிக்கும் காட்சியை ட்விட் போட்டிருக்கிறது. இது அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளைத் தாண்டி இந்தியாவுக்குள்ளும் வந்து விட்டது. இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. ஊரடங்கால் ஏழை மக்கள் வேலை இழந்து, உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த சூழலில், அம்மாநில பாஜக அரசில் மருத்துவக் கல்வி அமைச்சராக உள்ள டாக்டர் சுதாகர் செய்த ஒரு காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருக்கும் படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், நீண்ட நாளைக்குப் பிறகு குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் இணைந்துள்ளேன். சமூக இடைவெளியைப் பின்பற்றியிருக்கிறோம்.. என்று பதிவிட்டிருக்கிறார்.

இதைப் பார்த்து கன்னட மக்கள் பலரும் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஏற்கனவே இவர் கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமலுவுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் இவர், சமீபத்தில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பாஜகவுக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.சிவக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், நாமே ஒரு மருத்துவ நெருக்கடியில் மூழ்கியிருக்கிறது. இந்த தருணத்தில் கொரோனா தடுப்பு பணிக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இப்படி நீச்சல் குளத்தில் பொழுதைக் கழிப்பது மிகவும் பொறுப்பற்ற செயல். எனவே, தார்மீக அடிப்படையில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் எடியூரப்பா நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>