இந்தியாவில் 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 377 ஆக அதிகரிப்பு

நாட்டில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆனது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் நேற்று வரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,152 இருந்தது. 308 பேர் பலியாகியிருந்தனர். 856 பேர் குணமடைந்திருந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2687 பேர், டெல்லியில் 1564 பேர், தமிழ்நாட்டில் 1204, ராஜஸ்தான் 1034, மத்தியப் பிரதேசம் 730, குஜராத் 695, உ.பி. 660, கேரளா 387 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த 5 பேரும் 1984ம் ஆண்டில் நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால் கொரோனா அபாயம் அதிகமிருப்பதாகக் கடந்த வாரமே ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சைக்கென 600 மருத்துவமனைகள் உள்ளன. ஒரு லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. மேலும் 12 ஆயிரம் ஐ.சி.யு வார்டுகளும் தயாராக உள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

More News >>