ஊரடங்கு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது..

கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் 20ம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு சிறு, குறுதொழில்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. விவசாயம், தோட்டத்துறை, பண்ணைத் தொழில் மற்றும் விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம்.அதே சமயம், தொழிலாள்கள் அனைவருமே முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும்.

அதே சமயம், மே 3ம் தேதி வரை சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும். அரசியல், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை நீடிக்கும். ரயில், விமானம் மற்றும் போக்குவரத்துக்குத் தடை நீடிக்கும்.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கலாம். சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளைக் கண்டிப்பாகத் தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

ஏப்ரல் 20ம் தேதி முதல் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கலாம். எனினும், கொரோனா அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது. நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம். மருந்துப் பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமானச் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கியப் பணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள் மற்றும் போக்குவரத்து இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை அதற்கான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் இடங்களில் ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி விட வேண்டும். அந்த சமயத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் அடிக்கடி கைகழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கேண்டீன்களிலும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் வெளியே வரக் கூடாது. இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது

More News >>