அரசியல் கட்சிகள் உதவி வழங்க தடையில்லை.. ஐகோர்ட் உத்தரவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தடையில்லை. அதே சமயம், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு முடிந்த நிலையில், மேலும் 19 நாட்களுக்கு(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினக்கூலிகள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடியுள்ளனர். அவர்களுக்குத் தமிழக அரசு ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு போன்றவற்றை அளித்துள்ளது. இது அவர்களுக்கு போதவில்லை. சிலருக்கு இதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள், சானிட்டைசர், முகக்கவசம் போன்றவை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை யாரும் நேரடியாக வழங்கக் கூடாது. மாநகராட்சி கமிஷ்னர்கள் மற்றும் கலெக்டர்கள் மூலமே வழங்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 12ம் தேதி தடை உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், ம.தி.மு.க. சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோவும் தனித்தனியாகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்ப ஆகியோர் நேற்று விசாரித்தனர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, வறுமையில் வாடும் அத்தனை பேருக்கும் தேவையான அனைத்தையும் அரசே வழங்கி விட முடியாது.

கஷ்டப்படுவோருக்குத் தேவையானவற்றை மற்ற மக்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரே கூறியிருக்கிறார். எனவே, நேரடியாக உணவுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் தமிழக அரசின் செயல் தவறானது என்று வாதாடினார். தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களுக்கு உணவு வழங்கச் சென்றால், அதை வாங்க நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள். அதனால் நோய்த் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது என்றார்.இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனுத் தாக்கல் செய்தார். இதைப் பார்வையிட்ட நீதிபதிகள் வழக்கில் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொது மக்களுக்கு உதவுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படலாம். நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

More News >>