தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. முதல்வர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இங்கு மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 80, 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பாதிப்பு குறைந்து வருகிறது.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் சேர்த்து மொத்தம் 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 150 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 62 பேர் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது வரை பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது. தற்போது 27 லேப்களில் தினமும் 5590 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதற்கு முன்பே தமிழக அரசு 5 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. எல்லா வகையிலும் தமிழக அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் ஒத்துழைப்பு தரவில்லை.

இவ்வாறு முதல்வர் கூறினார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிப்பது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு முதல்வர், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் இந்த நோயைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு நிதியுதவி? ஏழைகளிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைப் பார்த்துத்தான் பயப்படுகிறார்கள் என்றார்.

More News >>