இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி

நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன உற்பத்தி குறைந்திருக்கிறது. எனினும், வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், நெல், கோதுமை இருப்பு அதிகமாக உள்ளதால், உணவு தட்டுப்பாடு வராது. நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் எனச் சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. மற்ற ஜி-20 நாடுகளை விட அதிகம்தான்.கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் மின்சார தேவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால், நாட்டின் மின்சாரத் தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றச் சேவை அதிகரித்துள்ளது.

சிறு, குறு தொழில்துறையினருக்குக் கடன் வழங்குவதற்கு வசதியாக வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இருப்பதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்வதற்காக மாநில அரசுகள், ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக 60 சதவீத கடன் பெறலாம். மேலும், வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியைச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

More News >>