ஊரடங்கு விதிமீறல்.. அபராத வசூல் ஒரு கோடி ரூபாய்..

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்துத் திருப்பி அனுப்புகின்றனர். அப்படியும் ஊர் சுற்றும் இளைஞர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றி தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று(ஏப்.18) காலை வரை தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2 லட்சத்து 28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 14951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.

More News >>