மன்மோகன் தலைமையில் காங்கிரசில் 11 பேர் குழு.. சோனியா நியமனம்..

காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2வது முறையாக பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்தத் தலைவர்களால் யாரையும் தலைவராக ஏகமானதாகத் தேர்வு செய்ய முடியவில்லை.

இதையடுத்து, முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராகத் தேர்வு செய்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த சோனியாவும் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். எனினும், அவரால் முழு அளவில் கட்சியில் கவனம் செலுத்த முடியவில்லை.இந்த சூழ்நிலையில், நாட்டின் பொருளாதார சீர்கேடு, கொரோனா நோய் பரவல், ஏழை மக்களின் துயரங்கள் அதிகரிப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய பாஜக அரசின் தோல்விகளைக் கடுமையாக எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் எதுவுமே பலமாக இல்லை. காங்கிரசிலும் ஒவ்வொரு மூத்த தலைவரும் ஒவ்வொருவிதமாகப் பேசத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை இறுதி செய்து ஒரே குரலில் ஒலிப்பதற்கு ஆலோசனைக் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவின் அமைப்பாளராக ரன்தீப்சிங் சுர்ஜிவாலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இக்குழுவில் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், மணீஷ்திவாரி, பிரவீண் சக்கரவர்த்தி, கவுரவ் வல்லபா, சுப்ரியா ஸ்ரீநாத், ரோகன் குப்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

More News >>