கொரோனா பரிசோதனை கருவிகள் என்ன விலை? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி..

கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தமிழகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து குறித்து ஒரு மாதம் முன்பே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரை கிண்டல் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு 70 வயதாகி விட்டதால் பயப்பட வேண்டாம்.

நாங்கள் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டிற்கு ஒருவருக்கு கூட கொரோனா வரவே வராது. வர விடவே மாட்டோம் என்று இருவரும் ஓங்கிப் பேசினார்கள். மேலும், தமிழகத்திற்குள் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஜனவரி மாதமே விமான நிலையங்கள், பஸ்நிலையங்களில் சோதனைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டதாகவும் கூறினார்கள். ஆனால், மார்ச் 13ல் நடந்த டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் வரை பங்கேற்று திரும்பினா்கள் என்பதும், அவர்களுடன் தாய்லாந்து மதபோதகர்களும் வந்திருக்கிறார்கள் என்பதும், அவர்கள் மூலமே தெரிய வந்தது. இதனால், ஜனவரி மாதமே விமான நிலையங்களில் சோதனையை தொடங்கி விட்டதாக முதல்வர் கூறியது பொய்யா? அல்லது இந்த 1500 பேரை கோட்டை விட்ட லட்சணத்தில்தான் பரிசோதனை நடந்ததா? என்ற கேள்வி எழுந்தது.

இது போல் பல விஷயங்களை தேதி வாரியாக குறிப்பிட்டு ஸ்டாலின் சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கம் போல், ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார்... என்று ஏதேதோ சப்பைக்கட்டு சாக்குகளை கூறி ஆத்திரப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஸ்டாலின் இன்று(ஏப்.18) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இதை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More News >>