சுங்கக் கட்டண வசூல்.. 2 மாதம் நிறுத்தி வைக்க முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..
அடுத்த 2 மாதங்களுக்குச் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன் 82 ஆக இருந்த உயிர் பலி தற்போது 437 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது நாட்டில் பலி சதவீதம் 3.3 சதவீதமாக உள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ம் தேதியுடன் இது முடிந்த பிறகு மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதன் காரணமாக இந்தியா பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் இந்தியப் பொருளாதார மட்டுமில்லாது, தனி மனித வாழ்வாதாரம் அகலப் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.நாள்தோறும் உணவுக்குக் கையேந்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உணவு கூட கிடைக்கவில்லை என மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் வீதிகளுக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை மக்களுக்கு முழுமையாகச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் வரும் 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு செய்துள்ளது.
இதில் நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் இருக்கும் அரசு, ஆனால் மக்களிடமிருந்து வரியை வசூல் செய்வதில் மட்டும் குறியாக உள்ளது. தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கே வழி வகுக்கும்.
ஏனென்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கார், பஸ்கள் போன்றவை இயக்கப்பட மாட்டாது. சரக்கு வாகனங்கள் மட்டுமே இயங்கும், அப்படி இயங்கும் போது சுங்ககட்டணம் வசூலிப்பது எப்படி நியாயமாகும். இந்தியத் தேசிய நெடுஞ்சாலைத்துறை நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகளை அமைத்து காண்ட்ராக்டர்கள் மூலம் நிர்வகித்து வருகிறது. இதில் 42 சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பது உண்மை.
ஆனால் ஊரடங்கு தொடர்பாகப் பிரதமர் மோடி பேசுகையில் பணத்தை விட மக்களின் உயிர் முக்கியம் எனப் பேசியிருந்தார், தற்போது அனைத்து தொழிற்நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்து மூடப்பட்டு வருவாய் இன்றி பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றன. அப்படியிருக்கும் போது அடுத்த 2 மாதங்களுக்குச் சுங்க கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.