நாளை முதல் எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி.. மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 15,712 பேருக்கு இந்நோய் தொற்றியிருக்கிறது. 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அறிவித்த பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லாத பகுதிகளில் வருகிற 20ம் தேதி(நாளை) முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நாளை முதல் எந்தெந்த தொழில்கள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் கொடுத்துள்ளார். அவை வருமாறு:ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். விவசாயம் மற்றும் தோட்டத் தொழில்களைத் தொடங்கலாம். மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ளலாம். தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் நடைபெறும். இந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது விநியோகத் துறை வழக்கம் போல் செயல்படும்.மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு எந்த தடையும் இல்லை. வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஊழியர்களுடன் நிபந்தனைகளை கடைப்பிடித்து இயங்கலாம். கட்டுமானப் பணிகளை சமூக இடைவெளி கடைப்பிடித்துத் தொடரலாம். மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிக்கலாம். மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இந்த ஊரடங்கு தளர்வுகள், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குப் பொருந்தாது. மேலும், மாநில அரசுகள் இந்த தளர்வுகள் குறித்து தனியே முடிவெடுத்து அறிவிக்கலாம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

More News >>