ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் ஊழலா? ஸ்டாலின் புகாருக்கு அரசு விளக்கம்..

ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

கொரோனா எதிர்ப்புச் சக்தி குறித்து 30 நிமிடத்தில் பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்டிங் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்காததால் ஊழல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் கிளப்பினார்.இதையடுத்து, ஒரு ரேபிட் டெஸ்டிங் கருவியை ரூ.600க்கு வாங்கியுள்ளதாகவும், ஏற்கனவே தேசிய புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் அந்த விலைக்குத்தான் வாங்கியிருக்கிறது என்றும் தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.

இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ வெளியிட்ட பதிவில், நாங்கள் மிகவும் தரம் வாய்ந்த ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் 75000 வாங்கியிருக்கிறோம். ஒரு கருவி ரூ.337 மற்றும் ஜி.எஸ்.டி. என்ற விலையில், இந்தியாவில் உள்ள தென்கொரிய நிறுவனத்திடம் வாங்கியிருக்கிறோம். இந்த விலைதான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலை என்பதுடன் தரம் வாய்ந்த கருவியாகும். இந்த விலைக்கு இவற்றைப் பெறுவதற்கு இங்குள்ள தென்கொரியத் தூதரும், தென்கொரியாவில் உள்ள நமது இந்தியத் தூதரும் மிகவும் உதவிக்கரமாக இருந்தார்கள். வெல்டன் சட்டீஸ்கர் டீம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் பி.உமாநாத் கூறியது:முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி கோவிட்-19 வைரசைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான பொருள்களைத் தமிழக அரசு கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது.

கொரோனா பரிசோதனைகள் பிசிஆா் முறையில்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டன. அதிகமானோருக்குப் பரிசோதிப்பதற்காக விரைவுப் பரிசோதனை கருவி(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) மூலம் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆா்) கடந்த 2-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. மறுநாளே அந்தக் கருவிகளை வாங்கத் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. 5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க ஆர்டர் செய்திருந்தோம். தற்போது 24 ஆயிரம் கருவிகள் கிடைத்துள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசு 12 ஆயிரம் கருவிகளை வழங்கியுள்ளது. மொத்தமாக 36 ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகள் வந்துள்ளதால், பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

விரைவு பரிசோதனை கருவிகளை மத்திய அரசு நிர்ணயித்த விலையில்தான் தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒரு கருவி ரூ.600-க்கு வாங்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களின் தரத்தைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம். எதிர்காலத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தை விடக் குறைந்த விலைக்கு நாம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.இவ்வாறு உமாநாத் தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் மாநில அரசு ரூ.337க்கு வாங்கிய கருவியை மத்திய பாஜக அரசு நிறுவனமும், தமிழக அரசும் தலா ரூ.600 வாங்கியிருப்பது பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஒரு கருவிக்கு ரூ.263 அதிகம் என்றால், 36 ஆயிரம் கருவிகளுக்கு 94 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அதிகமாகிறது.

More News >>