தமிழகத்தில் கொரோனா பலி 17 ஆக அதிகரிப்பு.. நரம்பியல் டாக்டர் சாவு.. நோய் பாதிப்பு 1477 ஆனது
தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ நெருங்குகிறது. சென்னையில் நரம்பியல் டாக்டரும், ஈரோட்டில் வாலிபர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.இந்த வைரஸ் தமிழகத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தமிழக அரசைக் கடந்த மாதமே சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எச்சரித்தன. ஆனால், அப்போது, கொரோனா, தமிழகத்திற்கு வரவே வராது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கடந்த மாதம் சட்டசபையில் வீராவேசமாக பேசினர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்துள்ளது. இதில், நாளிதழ் நிருபர் ஒருவரும், தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஒருவரும் அடங்குவர். இப்போது சென்னையில் மட்டும் 285 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 133 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
இதே போல், ஈரோடு 70, நெல்லை 62, செங்கல்பட்டு 53, நாமக்கல் 50 மற்றும் திருச்சி, திருவாரூர், மதுரை, தஞ்சை, தேனி, நாகை, கரூர் மாவட்டங்களில் 40க்கும் அதிகமானோருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. ஆக மொத்தம், தமிழகத்தில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சென்னையில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், நரம்பியல் டாக்டருமான ஒருவர், கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று உயிரிழந்தார். இன்று(ஏப்.20) காலையில் ஈரோடு மாவட்ட மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இது வரை 42 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு லட்சத்து 4,4936 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்து முடிவுகள் வெளியே வரும் போதுதான், தமிழகத்தில் எந்த அளவுக்கு கொரோனா சமூக பரவலாக மாறியிருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். தற்போது 21 அரசு லேப்கள் உள்பட 31 லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.