இத்தாலியிலும் தேர்தல் நடக்கிறதே..- ராகுலை நக்கலடித்த அமித்ஷா!
"இத்தாலியிலும் தேர்தல் நடந்து வருகிறதே..."என ராகுல் காந்தியைக் கேலி செய்யும் வகையில் அமித்ஷா பேசியுள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அப்போது பேட்டியின் நடுவே அவர், "இத்தாலியில் கூட தேர்தல் நடந்துகொண்டிருக்கிறதாமே. எனக்கு ஏதும் தெரியாது. ஒரு செல்போன் குறுந்தகவலில் பார்த்தேன்" என ராகுல் காந்தியை கேலி செய்யும் வகையில் பேசினார்.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்தாண்டு ஹோலி பண்டிகையைக் கொண்டாட அவரது தாய் வழிப் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். இத்தாலியில் இருக்கும் பாட்டியைச் சந்திக்கப் போவதாகவும் தனது ட்விட்டர் ஹோலி வாழ்த்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்துள்ள வேளையில் 'பா.ஜ.க தான் கொண்டாட வேண்டும். ஆனால், ராகுல் கொண்டாட்டத்துக்குச் சென்றுள்ளார்' என பா.ஜ.க-வினர் கேலி செய்து வருகின்றனர்.