மும்பை அருகே 2 சாமியார்கள் அடித்துக் கொலை.. 110 பேர் கைது

மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர்.மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்கைச் சாதகமாகப் பயன்படுத்தி, திருட்டுச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதனால், கட்சின்ஜல்லி கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றி வந்து பாதுகாத்து வந்தனர்.

இந்த சூழலில், சாமியார்களின் கார் அந்த கிராமத்தின் வழியாக நள்ளிரவில் சென்றிருக்கிறது. அப்போது அந்த கிராமத்திற்குப் பாதுகாப்புக்குச் சுற்றி வந்த கும்பல், அந்த காரை தடுத்து நிறுத்த முயற்சித்தது. ஆனால், காரில் இருந்த சாமியார்களும், டிரைவரும் அந்த கும்பலை திரட்டுக்கும்பல் என்று நினைத்து வேகமாகக் காரை ஓட்டிச் சென்றனர். ஒரு கட்டத்தில் கிராமத்தினர் அந்த காரை தடுத்து நிறுத்தி விட்டனர். காரை நிறுத்தியதும், 2 சாமியார்களும் இறங்கி ஓடினர். உடனே கிராமத்தினர், அந்த சாமியார்களை திருடர்கள் என்று நினைத்து அவர்களைத் துரத்திச் சென்றனர். அப்போது, சாமியார்களும், டிரைவரும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தஞ்சமடைந்தனர். இதற்கிடையே அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வீட்டிற்குள் நுழைந்து கார் டிரைவர் உள்பட 3 பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.

வீட்டுக்கு வெளியே கூடியிருந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு போலீசார் மீதும், அந்த மூவர் மீதும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. திருடர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட சாமியார்கள் மற்றும் டிரைவர் மீது அந்த கும்பல் கருங்கற்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியதால், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகப் பரவியது. இதையடுத்து, உடனடியாக அந்த வன்முறைக் கும்பலைக் கைது செய்ய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த 110 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 9 பேர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 101 பேரை வரும் 30ம்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்து. இதையடுத்து, 101 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, வன்முறையைத் தடுக்கத் தவறிய காசா காவல் நிலைய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

More News >>