தமிழகத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட் சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை 373 ஆனது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. சென்னைதான் மாநிலத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக இருக்கிறது. இங்கு 373 பேருக்கு நோய் பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், மாநிலத்தில் இது வரை மொத்தம் 1629 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

தமிழகத்தில் சென்னை தான் கொரோனாவின் ஹாட் ஸ்பாட் ஆக இருந்து வருகிறது. நேற்று(ஏப்.22) சென்னையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி மாநாட்டிற்குப் போய் வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பிலிருந்தவர்களுக்குத்தான் ஆரம்பத்தில் கொரோனா பரவியது. ஆனால், கடந்த 4 நாட்களில் நாளிதழ் நிருபர் ஒருவரும், தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 32 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. அதே போல், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று பரவியிருக்கிறது. எனவே, கொரோனா பாதித்தவர்கள் பகுதிகளில் உலா வருபவர்களுக்கும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 373, கோவை 134, திருப்பூர் 109, திண்டுக்கல் 77, ஈரோடு 70, மதுரை 50, நாமக்கல் 51 மற்றும் இதர மாவட்டங்களில் இதை விட குறைவானவர்களுக்கும் கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இது வரை 18 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>