சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டு சிறை.. சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..

கொரோனா தொற்று நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி உள்பட சில இடங்களில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நோயாளிகள் தாக்கினர். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 2 டாக்டர்களின் உடல்களை அடக்கம் செய்ய விடாமல் மக்கள் போராட்டம் நடத்தினர். ஆம்புலன்ஸ்களை அடித்து நொறுக்கி, பணியாளர்களைக் கடுமையாகத் தாக்கினர். இதனால், டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புதிய அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 மாதம் முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அதே போல், கிளினிக்குகளை சேதப்படுத்தினால், அதன் சந்தை மதிப்பைப் போல் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த அவசரச் சட்டம் நேற்றே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தத்துக்கு அனுப்பப்பட்டது. இதைப் பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இதற்கு இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அவசரச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால், டாக்டர்களை தாக்கினாலோ, கிளனிக்குகளை சேதப்படுத்தினாலோ அவர்கள் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும்.

More News >>