ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7500 நிதியுதவி தரச் சோனியா வலியுறுத்தல்..

ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், ஆனால், இந்த சூழலிலும் கூட, மக்களிடையே சமூக பிளவு மற்றும் வெறுப்பு வைரசை பாஜக பரப்பி வருகிறது. இதனால், சமுதாயத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பைச் சரிசெய்யக் காங்கிரஸ் கட்சியினர் பாடுபடுவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், பிறமாநிலத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முற்றிலும் முடங்கிப் போய் விட்டன.

இவற்றுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்காக, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களிடம் மாநிலங்களின் நிலைமை குறித்து கருத்துக் கேட்டு, அவற்றின் அடிப்படையில் பல்வேறு யோசனைகளைப் பிரதமருக்குத் தெரிவித்தேன். இதற்காக நான் பலமுறை கடிதம் எழுதினேன். ஆனால், மத்திய அரசு எதையும் பொருட்படுத்தவில்லை. மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டுமெனக் கோருகிறேன்.மே 3ம் தேதி ஊரடங்கு முடிந்ததும் மக்களின் கஷ்டங்களைப் போக்குவதற்கோ மீண்டும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கோ மத்திய அரசிடம் சரியான திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஊரடங்கு முடிந்த பிறகு நிலைமை இ்ன்னும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

கொரோனாவை கண்டறியக் குறைந்த அளவில்தான் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனை கருவிகளுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை.பொது விநியோகத் திட்டத்தில் வராத ஏழைமக்களுக்கும் 10 கிலோ உணவு தானியங்கள், பருப்பு, சர்க்கரை வழங்க வேண்டும். ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். கடுமையாகப் பாதித்துள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் விளைபொருட்களை நேரடி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு,குறு நடுத்தரத் தொழில் துறையைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும் டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் பாராட்டுகிறோம்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

More News >>