டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடக்கமா? முதலமைச்சரா? - புகழேந்தி அதிரடி பேட்டி

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை என தினகரன் தீவிர ஆதரவாளர் கர்நாடகா புகழேந்தி அதிரடியாக கூறியுள்ளார்.

அதிமுக இரு அணிகளாக பிறிந்த பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உடன் 18 எம்.எல்.ஏக்கள் உடன் வந்தனர். இதனையடுத்து, கட்சித்தாவல் தடைசட்டத்தின்படி அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இதற்கிடையில், நடந்து முடிந்த கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக வெற்றிபெற்றதை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளர் கர்நாடகா புகழேந்தி தனக்கும் டிடிவி.தினகரன் தனிக்கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள புகழேந்தி, “கட்சி குறித்து தினகரன் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதன் மீதான தீர்ப்பு வெளிவந்த பிறகு தான் முடிவை எடுக்க முடியும்.

என்னை பொறுத்த வரையில் தினகரன் தனிக்கட்சி தொடங்குவதில் எனக்கு நாட்டம் இல்லை. அதிமுக என்பது எங்களுடைய கட்சி, இரட்டை இலை எங்களுடைய சின்னம் ஆகும். கால சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் பதவியில் அமர்ந்துள்ளார்கள். எனவே, இது எங்களுடைய கட்சி. மேலும், டிடிவி தினகரனை அதிமுகவிலேயே முதல்வராக்க விரும்புகிறோம். தனிக்கட்சி என்பதில் விருப்பம் இல்லை.

அதிமுகவில் உள்ள 60 முதல் 70 எம்.எல்.ஏக்கள் வரையில் தினகரன் பக்கம் வர தயாராக உள்ளார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு விரைவில் வர உள்ளதால், இந்த தீர்ப்பிற்கு பிறகு கண்டிப்பாக அனைவரும் தினகரன் பக்கம் வர உள்ளார்கள். கண்டிப்பாக முதல்வராக டிடிவி.தினகரன் வருவார்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>