மதுரை கலெக்டர் ஆபிசில் பாஸ் கேட்டுக் குவிந்த மக்கள்.. வாயிற்கதவு மூடப்பட்டது..

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாகன பாஸ் கேட்டு ஏராளமான மக்கள் குவிந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, நுழைவு வாயிற்கதவு மூடப்பட்டது.தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 நாள் ஊரடங்கு முடிந்து கடந்த 20ம் தேதியன்று சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படாததால், சுப துக்க நிகழ்வுகள் மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி, மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முயல்கிறார்கள். இதற்காக அவர்கள் கலெக்டர் அலுவலகங்களில் வாகன பாஸ் கேட்டு அலையத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாகன பாஸ் கேட்டு, இன்று காலை 10 மணியளவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் சமூக இடைவெளி என்பதே இல்லாமல் மிகவும் நெருக்கமாக மக்கள் நடமாட்டம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிற்கதவை மூடியுள்ளனர். மேலும், வாகன பாஸ் கேட்டு வந்துள்ளவர்களில், தகுதியற்றவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

More News >>