இந்தியாவில் கொரோனா பலி 718 ஆக அதிகரிப்பு.. நோய்ப் பாதிப்பு 23,077 ஆனது
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. நோய்ப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்தது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.24) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 23,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 4749 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 17,610 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் இன்று வரை 6430 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 283 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 2624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 112 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2376 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 50 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 1699 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 83 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவில் 960 பேர் பாதித்த நிலையில், 24 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1510 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 24 பேர் பலியாகி விட்டனர். ஆந்திராவில் 895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1683 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 20 பேர் பலியாகியுள்ளனர்.