சென்னை, கோவை உள்பட 5 மாநகரங்களில் முழு ஊரடங்கு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் மே 3ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கிராமப்புறங்களில் கொரோனா பரவல் குறைந்து விட்டாலும், நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டியுள்ளது.சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதே போல், சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் வரும் 28ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை செயல்படலாம். தலைமைச் செயலகம், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, மின்சாரம், ஆவின் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படலாம். மத்திய அரசு மற்றும் வங்கிகள் அனைத்தும் 33 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை செயல்படும். உணவகங்களில் தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து உணவு பெற்றுக் கொள்ளலாம். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏழைகளுக்கு உதவி வழங்கலாம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்