30 கோடி மக்களுக்கு தலா ரூ 10 ஆயிரம், 20 கிலோ அரிசி கோதுமை.. மத்திய அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள்..

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பொருளாதாரத்தை மக்கள் முற்றிலும் இழந்து இருப்பது நிதர்சனம். பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடும் நாளினை தற்சமயம் வரை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. என்றாலும் வாழ்வாதாரம் இழந்த பல கோடி மக்கள் பசியால் உயிரிழக்கும் துரதிஷ்ட நிலை உருவாகி விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

தற்சமயம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்பதால் 230 கோடி மக்களின் வாழ்வாதார தேவையைப் பூர்த்தி செய்திட அத்தியாவசிய மற்ற திட்டங்களுக்காக 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூபாய் 30, 42, 230 கோடி நிதியிருந்து மக்களின் பசி , வாழ்வாதார தேவை யை பூர்த்தி செய்திட அத்தியாவசிய மற்ற திட்டங்களுக்கான செலவினங்களை இயன்றவரைக் குறைத்துக் கிடைக்கப்பெறும் நிதியினை மக்களுக்கு வழங்கி அரசு உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் குறிப்பாக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளான பாதுகாப்புத் துறை, பொதுத்துறை ரயில்வே துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, ஊரக வளர்ச்சித்துறை நிதியினை பயன்படுத்தலாம்.

அந்த நிதியை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய நாட்டில் உள்ள சுமார் 30 கோடி குடும்பத்தினருக்கும் இரண்டு மாத வாழ்வாதார தேவைக்குப் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் அதேபோல் மாதம் 20 கிலோ வீதம் அரிசி கோதுமை இரண்டு மாதத்திற்கு இலவசமாகப் பொருட்களையும் வழங்கி மத்திய அரசு உதவி செய்தால் மக்களின் மன அழுத்தம் குறைந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்தியத் தேசத்தின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தாலும் மக்களுக்குப் பசி வராமல் தடுத்து அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரே மருந்தாக நிவாரண உதவி மட்டுமே இருக்க முடியும் மக்களின் தற்சமய வாழ்வாதார தேவை பூர்த்தியானால் போர்க்காலத்தில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு அமல்படுத்தி மக்கள் வீட்டுக்குள் இருப் பதை கட்டாயமாக்கி நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கான தீவிர முயற்சியும் பரிசோதனைகளையும் அரசு எளிதாக மேற்கொண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் கட்டுப்பாடு பணிகளுக்கு மாற்றுப்பணிகளுக்குப் பதிவு செய்துள்ள முன்னாள் ராணுவத்தினர் சுமார் 4.5 லட்சம் வீரர்களைப் பயன் படுத்தவும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதன் வாயிலாக விரைவில் நோய் தாக்குதலிலிருந்து நாம் விடுபட முடியும்.

தற்போதைய கடினமான சூழலைக் கடந்து இந்தியத் தேசம் இயல்பு நிலைக்குத் திரும்பும் நாளில் மக்கள் அயராத உழைப்பின் அளித்து சுய பொருளாதார முன்னேற்றத்திற்கும் சீரமைப்புக்கும் ஒன்றுபட்டுச் செயலாற்றும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

More News >>