மளிகைக் கடைகள் மாலை வரை அனுமதி.. முதல்வர் திடீர் அறிவிப்பு
சென்னை உள்பட மாநகரங்களில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், இன்று மட்டும் அவை மாலை 3 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல் வரும் 28ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கிற்குள் இன்னொரு ஊரடங்கா? இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் மக்கள் குழம்பிப் போயினர்.
இதையொட்டி, நேற்று மாலை ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், கோயம்பேடு மார்க்கெட் போன்றவை இயங்கும், நடமாடும் காய்கறிக் கடைகள் இயங்கும் என்று கூறப்பட்டது. அப்படியென்றால் ஏற்கனவே உள்ள ஊரடங்குதானே என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் திடீரென எல்லா கடைகளையும் நாளை(ஏப்.26) காலை 6 மணி முதல் மூடி விடுவார்களோ என்று பயந்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் அதிகாலையிலேயே அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை உறுதி செய்ய முடியாமல் கடைக்காரர்களும், காவல்துறையினரும் திணறினர்.இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொது மக்களின் வசதிக்காக இன்று மட்டும் மளிகை உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.