சென்னையில் மழையால் கொரோனா பரவுமா?.. இது வரை 495 பேருக்குப் பாதிப்பு

தமிழ்நாட்டில் சென்னையில்தான் கொரோனா பரவுவது தொடர்கிறது. நேற்று வரை 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, மழையால் கொரோனா மேலும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஏப்.24) 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. இதில் 960 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது.

தற்போது 30 அரசு லேப் மற்றும் 11 தனியார் லேப் என்று 41 லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று 7131 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, இது வரை 72,965 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சென்னையில்தான் கொரோனா பரவல், சமூக பரவலாகி மாறியிருக்கிறது. நேற்றும் சென்னையில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கொரோனா நோயாளியுடன் ஏற்பட்ட தொடர்பில்தான் நோய் பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் இது வரை கொரோனா பாதிப்பு 495 ஆகியுள்ளது. சென்னையில் இன்று(ஏப்.26) அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில்தான் கொரோனா பரவுவது குறைவாக உள்ளதாக அமெரிக்க ஆய்வுகளில் கூறப்பட்டது. எனவே, மழை காரணமாகச் சென்னையில் கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 148 ஆனது. திருப்பூர் 110, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, செங்கல்பட்டு 58, நாமக்கல் 55, மதுரை 60, திருச்சி 51 என மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிருவருக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது.

More News >>