மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து..

ஊரடங்கால், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது.

அதே போல், மே 2ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 3ம் தேதி திக்விஜயம், 4ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், 5-ம் தேதி தேரோட்டமும் நடைபெற இருந்தது. அதன் தொடர்ச்சியாக, அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு 5ம் தேதி புறப்படுவதாகவும், 6ம் தேதி தல்லாகுளத்தில் எதிர்சேவையும், 7ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுவதாக இருந்தது.ஆனால், தற்போது கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க கூட்டம் சேர்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாகக் கோயில் இணை ஆணையர் நடராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, கள்ளழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளையும் நடத்த இயலாது என்று கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், மே 8ம் தேதி மாலை 4.30 மணிக்கு, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசிக்கும் நிகழ்ச்சி ஆகியவை கோயிலின் உட்பிரகாரத்தில் நடைபெறும் என்றும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும், அந்த நிகழ்வுகளை அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலையாகக் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>