`வெய்ட்ட குறைங்க! - ட்ரம்ப்புக்கு ஆர்டர் போடும் மருத்துவர்
By Rahini A
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒரு நாட்டுக்கு மட்டும் அதிபராக இருந்தாலும் வேர்ல்டு பேமஸ். அவரது சிகை அலங்காரம், பேசும் தோரணை, நடக்கும் விதம் என அனைத்தும் பலரால் மிமிக் செய்யப்படுகிறது. குறிப்பாக அவரது உடல் எடையை வைத்து பலர் கிண்டல் செய்கின்றனர். இதற்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாரோ இல்லையோ அவரது டாக்டர் ரோன்னி ஜாக்சன் முற்றுப்புள்ளி வைக்க ஆயத்தம் ஆகியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பேசிய ஜாக்சன், `அதிபர் ட்ரம்ப்பின் உயரம் 6 அடி 3 அங்குலம். அவரது எடை 239 பவுண்டுகள். அவர் இன்னும் ஒரேயொரு கிலோ அதிகரித்தால் உடல் பருமனானவர் என்ற நிலையை அடைந்து விடுவார். எனவே அவருக்கு புதிய டயட்டை பின்பற்றப் போகிறோம். மேலும், டயட் உடன் கூடிய உடற்பயிற்சியிலும் அவரைக் கவனம் செலுத்த வைக்கப் போகிறோம்' என்று தெரிவித்தார்.
இந்த புதிய டயட் அடிப்படையில், ட்ரம்ப், அவருக்கு மிகவும் பிடித்த சிவப்புக் கறி உணவுகளுக்குப் பதில், சாலட், சூப் மற்றும் மீன் வகை உணவுகளை சாப்பிடப் போகிறாராம். அவர் மிகவும் விரும்பும் மெக்டொனால்டு உணவுக்கும் இந்த டயட்டினால் குட்-பை சொல்லியுள்ளாராம். அவருக்கு மெக்டொனால்டு எந்தளவுக்குப் பிடிக்கும் என்றால், `நான் மிகவும் சுத்தமான ஆள். மெக்டொனால்டில் மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. அங்கு ஒரு தரம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இருப்பதற்கு, மெக்டொனால்டுக்கு போவது எவ்வளவோ மேல்' என்று மெக்டி-க்கு ஒரு பேட்டியில் சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.