இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் தொடுகிறது..

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 934 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் உதயமாகி, உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் கொடிய வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.28) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 29,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 934 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1543 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8590 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் நேற்று 27 பேர் இறந்ததையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 369 ஆகியுள்ளது. குஜராத்தில் 3548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 162 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 3108 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,168 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 110 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1855 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 31 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 2328 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 51 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 1937 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>