தமிழகத்தில் ஊரடங்கு மே 3ல் தளர்த்தப்படுமா.. முதல்வர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி. 1,937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை இந்நோய்க்கு 24 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களின் பணிகள் ஆய்வு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களைச் சிவப்பு மண்டலமாகப் பிரித்து, அவற்றில் மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பது என்றும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டச் சூழலுக்கு ஏற்பட சில கட்டுப்பாடுகளை நீக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து, இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, நாளை(ஏப்.29) மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

More News >>