கொரோனா உற்பத்தி மையமாக மாறிய சென்னை..
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சீனாவின் உகான் நகரிலிருந்து வந்த மருத்துவ மாணவிக்குத்தான் முதலில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. ஆனால், மத்திய பாஜக அரசும், பல மாநில அரசுகளும் மார்ச் 20 தேதி வரை அலட்சியமாக இருந்ததால், இப்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி விட்டது.தமிழகத்தில் நேற்று வரை 1937 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில், நேற்று(ஏப்.28) மாலை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 80 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள். இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆனது. இது தவிர நேற்று செங்கல்பட்டில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் மற்றும் நாமக்கல்லில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.தற்போது, கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 61, செங்கல்பட்டு 70, தஞ்சை 55, திருவள்ளூர் 53, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்த நிலையில், கடந்த 2 நாள் முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, சென்னை, சேலம் உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 26ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு கடைகள் இயங்குமா, எந்தெந்த கடைகள் இயங்கும் என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் என்று ஆளுக்கொரு அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், மக்கள் குழம்பிப் போயினர். ஏப்.26 முதல் 4 நாட்களுக்கு எதுவுமே கிடைக்காதோ என்று பீதியடைந்தனர்.
இதனால், ஏப்.25ம் தேதியன்று சென்னையின் அத்தனை மார்க்கெட்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 50 ஆயிரம் பேர் திரண்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதே போல், திருவான்மியூர் மார்க்கெட்டிலும் ஏராளமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு மார்க்கெட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு வந்து சென்றவர்களில் இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது என்பது தெரியவில்லை.இந்த சூழலில், மக்கள் கூட்டத்தைக் கூட்டி, கொரோனாவை இந்த அளவுக்கு வேகமாகப் பரவச் செய்ததே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற ரீதியில் சமூக ஊடங்களில் ஏராளமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன.