நிரவ் மோடி, மல்லையா உள்பட 50 தொழிலதிபர்களின் வங்கிக்கடன் ரூ.68,607 கோடி தள்ளுபடி.. மோடி அரசு மீது ராகுல் விளாசல்..

பாஜக அரசின் நண்பர்களாக உள்ள 50 தொழிலதிபர்களின் ரூ68,607 கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று ஆர்.டி.ஐ. தகவலைக் காட்டி, குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்கள், வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது பாஜகவும், மோடி அரசு மீது காங்கிரசும் மாறிமாறி குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாக ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று ஒரு தகவலை வெளியிட்டார். வங்கிக் கடன் மோசடிப் பட்டியலில் முதல் 50 இடங்களில் உள்ள பெயர்களை வெளியிட்டார். சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் இவை இடம் பெற்றிருந்தன.அதன்படி, ரிசர்வ் வங்கி கடந்த 24ம் தேதி அளித்துள்ள பதிலில், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத 50 தொழிலதிபர்களின் பெயர்களையும், கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறது. நிர்வாக ரீதியாக மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதன் விவரம் வருமாறு:மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் ரூ.5,492 கோடி, ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் ரூ.4,314 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் ரூ.4,076 கோடி, ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் ரூ.2,850 கோடி, குடோஸ் கெமி ரூ.2,326 கோடி, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான ருச்சி சோயா ரூ.2,212 கோடி, சூம் டெவலப்பர்ஸ் ரூ.2,012 கோடி, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,943 கோடி, பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் ரூ.1,962 கோடி மற்றும் மெகுல் சோக்ஷியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திர நிறுவனங்களின் ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68,607 கோடி கடன்களை, மோடி அரசு ரத்து செய்திருக்கும் தகவல் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.வங்கிகளில் அதிக கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலில் முதல் 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு நான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு நேரடி கேள்வி எழுப்பினேன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. இப்போது ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் மூலம், நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட பாஜகவின் நண்பர்கள்தான் அந்த நபர்கள் என்பதும், அதனால்தான், அவர்கள் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை என்பதும் தெரிந்துவிட்டது.

இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

More News >>