சிதம்பரத்திடம் ராகுல் காந்தி பாடம் கற்க வேண்டும்.. பிரகாஷ் ஜவடேகர் அறிவுரை

வங்கிக் கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் விஷயம் தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். அவர் ப.சிதம்பரத்திடம் டியூஷன் போக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசு மீது ஒரு குற்றச்சாட்டு கூறினார். இது பற்றி அவர் ட்விட்டரில், நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68,607 கோடி கடன்களை, மோடி அரசு ரத்து செய்திருக்கும் தகவல் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

வங்கிகளில் அதிக கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலில் முதல் 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு நான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு நேரடி கேள்வி எழுப்பினேன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. இப்போது ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் மூலம், நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட பாஜகவின் நண்பர்கள்தான் அந்த நபர்கள் என்று தெரிய வந்துள்ளது என்று கூறியிருந்தார்.

இது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், வராக் கடன்களை தள்ளுபடி கணக்கில் மாற்றுவது என்பது வழக்கமான நடைமுறைதான். கடந்த 2009-2010 முதல் 2013-2014ம் நிதியாண்டுக்குள் நாட்டில் உள்ள வர்த்தக வங்கிகள் சுமார் ஒரு லட்சத்து 45,226 கோடி கடன்களை தள்ளுபடி கணக்கில் சேர்த்துள்ளன. எனவே, மன்மோகன்சிங்கிடம் ராகுல்காந்தி இது பற்றி கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், கடன் தள்ளுபடி மற்றும் கடன் தள்ளிவைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், ராகுல்காந்திக்கு தெரியவில்லை. அவர் ப.சிதம்பரத்திடம் டியூசன் செல்ல வேண்டும். கடன் தள்ளி வைப்பு என்றால், மோசடி செய்தவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக அர்த்தம் அல்ல. நிரவ் மோடி சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

More News >>