சென்னை, கோவை, மதுரையில் நாளை ஊரடங்கு தளர்வு.. மாலை வரை கடைகள் திறப்பு..

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை(ஏப்.30) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 26ம் தேதி முதல் இன்று(ஏப்.29) இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று இன்னொரு குழப்பமான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த 12 குழுக்களின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர், மாவட்டக் கலெக்டர்களிடமும் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில்நாளை(ஏப்.30) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும். மே 1ம் தேதி முதல், மீண்டும் கடந்த 26ம் தேதிக்கு முன்பிருந்த ஊரடங்கு நிலை கடைப்பிடிக்கப்படும். அதாவது, அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மக்கள் பொருட்களை வாங்குவதற்கு அவசரம் காட்டாமல், நிதானத்துடன், பொறுமையை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து சென்று சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>