சினிமா பற்றி மரண வாக்குமூலம் அளித்த இர்பான் கான்.. ”உடம்புக்குள் புகுந்த அழையா விருந்தாளிகள்”

ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆஃப் பய் ஹாலிவுட் படத்திலும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் இர்பான் கான். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. அவரது உடல் மும்பையில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இர்பான் கான் கடைசியாக, ஆங்கிரசி மீடியம் என்ற படத்தில் நடித்தார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் புரமோஷன் விழாக்களில் உடல்நிலை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அப்படத்தில் நடித்தது பற்றி ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில், ஆங்கிரசி மீடியம் படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். உண்மையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தை எவ்வளவு நேசிப்புடன் உருவாக்கினோமோ அதே உணர்வுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் என் உடலுக்குள் அழையா விருந்தாளிகள் புகுந்துவிட்டதால் பங்கேற்க முடியவில்லை. என்ன நடந்தாலும் சரி. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். இந்த பாசிடிவிட்டி எண்ணத்துடன் இந்தப் படத்தையும் முடித்தோம் . இப்படம் உங்களுக்கு சில சமயம் சிரிப்பையும், சில சமயம் அழுகையையும் மீண்டும் சிரிப்பையும் தரும். டிரெய்லரை பார்த்து ரசியுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். படத்தைப் பாருங்கள். மற்றபடி ஆம், எனக்காகக் காத்திருங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.இதுவே இர்பான் கான் தான் நடித்த சினிமா பற்றி அளித்த மரண வாக்குமூலமாக அமைந்துவிட்டது. இந்த ஆடியோ தற்போது நெட்டில் வைரலாகி வருகிறது.

More News >>