ம.பி, மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை..

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1074 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 9318 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குஜராத்தில் 3774 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 119 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

கொரோனாவுக்கென மருந்தோ, தடுப்பு மருந்தோ இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா ஆரம்பக் கட்டத்தில் உள்ள போதே கண்டறிந்து காய்ச்சல் மாத்திரை(பாரசிட்டமால்) மற்றும் மலேரியாவுக்கான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளைக் கொடுக்கின்றனர்.இந்நிலையில், கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தவர்களிடம் இருந்து எதிர்ப்புச் சக்தியை ரத்தம் மூலம் எடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு அளித்தால் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், பிளாஸ்மா தெரபி எனப்படும் இந்த சிகிச்சையால் எந்த நோயாளிக்குமே எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்படவில்லை. அதனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) அனுமதி பெற்று, மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பிளாஸ்மா தெரபியை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.

இந்த வகையில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓரிருவருக்கு இந்த தெரபி பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. ம.பி.யில் இந்தூரில் 2 பேருக்கும், போபாலைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் நேற்று இந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.மகாராஷ்டிராவின் மும்பையிலும் ஒருவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மும்பையில் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு 7 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை மாநகராட்சி விநியோகம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள், பிளாஸ்மா தெரபி சிகிச்சையைப் பரிசோதிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளன.

More News >>