வடகொரிய அதிபர் நலமாக இருக்கிறார்.. போட்டோ வெளியானது..

வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறி, அடிக்கடி அணு ஆயுத சோதனைகள் நடத்தியும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வந்தது. அணு ஆயுதக் குவிப்பைக் கைவிடுவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் அன், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால், அவை தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கிம்ஜோங் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. மேலும், அவர் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி மற்றும் சித்தப்பா அடுத்த அதிபராக முயற்சிப்பதாகவும் பல்வேறு செய்திகள் உலா வந்தன. ஆனால், தென்கொரியா அதை மறுத்து, கிம்ஜோங் உயிருடன் உள்ளதாகக் கூறியது.

இந்நிலையில், வடகொரியாவில் வெளியாகும் ரோடாங் சின்முன் பத்திரிகையில் கிம்ஜோங் போட்டோ வெளியாகியுள்ளது. அவர் நேற்று சன்கோன் பகுதியில் ஒரு உரத் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் படம்தான் வெளியாகியிருக்கிறது. அதில் அவரது சகோதரி மற்றும் அவருக்கு நெருக்கமான ஆலோசகர் கிம் யான்ஜோங் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். இந்த படம் வெளியானதை அடுத்து, கிம்ஜோங் மரணமடைந்து விட்டதாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More News >>